திருபுவனை ஏரியில் வண்டல் மண் எடுக்க வந்த லாரிகள் சிறைபிடிப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு


திருபுவனை ஏரியில் வண்டல் மண் எடுக்க வந்த லாரிகள் சிறைபிடிப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sep 2020 9:06 PM GMT (Updated: 10 Sep 2020 9:06 PM GMT)

திருபுவனை ஏரியில் வண்டல் மண் எடுக்க வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனை,

புதுவையில் உள்ள பாசன குட்டைகள் மற்றும் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை தூர்வாரி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி 44 ஏரி, குளங்களை தூர்வாரி அவற்றில் இருந்து வண்டல் மண்ணை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி அரியூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் 5 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் திருபுவனை ஏரியில் வண்டல் மண் எடுத்தார். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து தங்களது ஏரியில் மண் எடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அந்த லாரிகளை சிறைபிடித்தனர். மேலும் லாரி, பொக்லைன் எந்திர டிரைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதை அறிந்து அங்கு வந்த ஒப்பந்ததாரரிடம், திருபுவனை சின்னபேட் பகுதியில் உள்ள கோவில்கள் புணரமைப்பு பணிகள் நிதி பிரச்சினையால் பாதியிலேயே நின்று போய் உள்ளதாகவும், அந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ஏரியில் மண் எடுப்பவர் கள், கோவில் திருப்பணிக்கு நன்கொடை அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதற்கு, அரசு உத்தரவுப்படிதான் ஏரியில் மண் எடுக்கப்படுவதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இதன்பின் சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டன.

Next Story