சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதல் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதல் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 Sept 2020 3:09 AM IST (Updated: 11 Sept 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த மோரை, அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 25). இவரது நண்பர் பிரவீன் ராஜ்(21). இவர்கள் இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் அசோக்குமார் அமர்ந்து சென்றார்.

சென்னீர்குப்பம்-ஆவடி சாலையில் காடுவெட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே ஓடிவந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பலியானார்

இதில் அசோக்குமார் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லேசான காயங்களுடன் பிரவீன்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமண நிச்சயம்

விபத்தில் பலியான அசோக்குமாருக்கு, அவரது உறவினர் மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் இந்த மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்து போனதால் அதற்குரிய இறுதி சடங்குகள் அனைத்தும் முடித்துவிட்டு அடுத்த மாதம் திருமணத்தை நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story