கொரோனா வைரஸ் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சவால் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


கொரோனா வைரஸ் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சவால் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 11 Sep 2020 9:44 PM GMT (Updated: 11 Sep 2020 9:44 PM GMT)

கொரோனா வைரஸ் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சவால் என்றும், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு, 41 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி பேசியதாவது:-

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. மனித வளத்தை உருவாக்குவது கல்வித்துறை. ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது. இந்த தொழிலுக்கு பெருமையை சேர்த்தவர் ராதாகிருஷ்ணன். அவர் நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றி சேவையாற்றினார். அவரது இந்த சேவை மகத்தானது. அவரது பிறந்த நாளை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடி வருகிறோம். உலகில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது மனித சமுதாயத்திற்கு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

நாடே பாராட்டியது

கொரோனா வைரசால் கல்வித்துறை பணிகள் முடங்கியுள்ளன. இதற்கு மத்தியில் 10-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக நடத்தினோம். இதை நாடே பாராட்டியது. இந்த தேர்வின் வெற்றிக்காக மந்திரி சுரேஷ்குமார் பாடுபட்டார். கொரோனா நேரத்தில் குழந்தைகள் வீடுகளிலேயே இருந்து பாடம் பயின்று வருகிறார்கள்.

கல்வித்துறை வித்யகாமா என்ற கற்றல் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தங்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரு செயலியை வெளியிட்டுள்ளோம். அவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அதை பயன்படுத்தி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அவர்கள் விடுமுறை எடுக்க தேவை இல்லை.

சமூக நீதி கொள்கை

இதனால் ஆசிரியர்கள் தங்களின் அதிக நேரத்தை கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இலவச சீருடை, பால், புத்தகம் போன்றவற்றை வழங்குவது மற்றும் கற்பித்தலில் ஆசிரியர்கள் பங்கு மகத்தானது. ஆசிரியர்கள் மீது வரும் புகார்களை சவால்களாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். சமீபத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகள் வரத் தொடங்கியுள்ளனர். சமூக நீதி கொள்கையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.

சமுதாய வளர்ச்சி கல்வித்துறையுடன் பின்னி பிணைந்துள்ளது. இதை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். கடந்த 5-ந் தேதி இந்த விருது வழங்கும் விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்ததை அடுத்து, இந்த விழா இன்று (அதாவது நேற்று) நடக்கிறது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி ஆசிரியர்கள் தங்களின் பணியை சிறப்பான முறையில் ஆற்ற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story