கல்லூரி தேர்வு விவகாரம்: மாணவர்கள் கூட்டமைப்பினர் ஊர்வலம் நாராயணசாமியுடன் சந்திப்பு


கல்லூரி தேர்வு விவகாரம்: மாணவர்கள் கூட்டமைப்பினர் ஊர்வலம் நாராயணசாமியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 12 Sept 2020 3:56 AM IST (Updated: 12 Sept 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார்கள்.

புதுச்சேரி,

கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் தேர்வு நடத்த பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து கல்லூரிகளும் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில் மாணவர் கூட்டமைப்பினர் நேற்று ஊர்வலம் நடத்தினார்கள். புதுவை காமராஜர் சிலை அருகே இருந்து தொடங்கிய ஊர்வலம் சட்டசபை நோக்கி வந்தது. ஊர்வலத்துக்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

நாராயணசாமியுடன் சந்திப்பு

தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி அதற்கு மேல் செல்ல அனுமதி மறுத்தனர். அதைத்தொடர்ந்து மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள், சாமிநாதன் தலைமையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதுவது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கொரோனா பாதிப்பு உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதலாம் என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால் அதற்கான வழிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்கள்.

ஆன்லைன் தேர்வு

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் அப்படி இல்லை என்று தெரிவித்தனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசியிருப்பதாகவும், கல்லூரி சென்று தேர்வு எழுத முடியாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத கல்லூரிகள் அனுமதிக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story