வீடுகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்ற பொதுமக்கள்


வீடுகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Sept 2020 5:09 AM IST (Updated: 12 Sept 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்றனர். மேலும், அவர்கள் உணவு சமைக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை அம்பிகாவதி தெரு, டிரைவர் காலனி, எம்பெருமான் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் சமையல் செய்வதற்கான பாத்திரங்கள், விறகு ஆகியவற்றுடன் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவதற்காக வந்தனர்.

அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள், கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “நாங்கள் அந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். தற்போது எங்களுக்கு மாற்று இடமோ, வீடுகளோ தராமல் திடீரென்று வீடுகளை காலி செய்வதற்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இதனைக் கண்டித்து, எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரையிலும் இங்கே குடியிருப்போம்“ என்று கூறினார்கள்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தொடர்ந்து அவர்களுடன் வந்த அ.ம.மு.க. பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 4 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், “50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்ற எங்களது வீடுகளை திடீரென்று இடிக்கப் போவதாகவும், எனவே, வீடுகளை உடனே காலி செய்ய வேண்டும் என்றும், 27 பேருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீசு கொடுத்துள்ளது.

இந்த கொரோனா தொற்று காலத்தில் எங்களுக்கு மாற்று இடமோ, வீடோ வழங்காமல் திடீரென்று வீடுகளை காலி செய்ய கூறினால், நாங்கள் எப்படி உயிர் வாழ முடியும்?. எனவே, மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பரபரப்பு

மனுவை கொடுத்து விட்டு வந்த பிறகும் அவர்கள், வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் உணவு சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சமையல் செய்ய தயாராக இருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story