ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பணிகள் நிறைவடைந்த சிறுவர் பொழுதுபோக்கு பகுதி திறப்பது எப்போது?


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பணிகள் நிறைவடைந்த சிறுவர் பொழுதுபோக்கு பகுதி திறப்பது எப்போது?
x
தினத்தந்தி 12 Sep 2020 1:00 AM GMT (Updated: 12 Sep 2020 1:00 AM GMT)

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பணிகள் நிறைவடைந்த சிறுவர் பூங்கா எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதி மக்களுக்கு பொழுதுபோக்குக்கு என்று இருந்த ஒரே இடம் வ.உ.சி. பூங்கா. மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொழுதுபோக்கி செல்வது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிப்பு இன்றி பொதுமக்கள் வந்து செல்லவே அச்சப்படும் நிலை இருந்தது. பூங்கா எப்போதும் சமூக விரோதிகள் வந்து செல்லும் இடமாக இருந்தது.

இந்தநிலையில் வ.உ.சி. பூங்காவை புதுப்பித்து கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் தொடங்கின. இதனால் பூங்கா முற்றிலும் அடைக்கப்பட்டது. அங்குள்ள மெயின் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

கொரோனா பாதிப்பு காலகட்டத்திலும் வ.உ.சி.பூங்கா சுற்றுச்சுவர் பொழுதுபோக்கு பகுதியில் பணிகள் நடந்து வந்தன.

தற்போது அழகிய புல்வெளியுடன் கூடிய பூங்கா பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன.

எதிர்பார்ப்பு

குழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்களும் வரையப்பட்டு உள்ளன. இந்த பூங்கா திறப்பது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுபற்றி ஒருவர் கூறும்போது, “ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொழுதுபோக்க என்று தற்போது எதுவும் இல்லை. வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சர்க்கஸ், பொருட்காட்சி என்று பொதுமக்களை கவரும் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆனால் அங்கு சந்தை கொண்டு வரப்பட்டதால் அதுவும் இனி இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே சினிமா தியேட்டர்களும் இயங்காத நிலை இருக்கிறது. தற்போது சிறுவர் பூங்கா பணிகள் நிறைவடைந்ததால் அதை திறந்தால் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும்” என்றார்.

மேலும் ஒருவர் கூறும்போது, “தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிறுவர்-சிறுமிகளை பூங்காவுக்கு அழைத்து வருவது சாத்தியம் இல்லை. எனவே முழுமையாக பணிகள் முடிந்த பின்னர், கொரோனா பரவல் இல்லை என்ற நிலை ஏற்பட்ட பிறகு பூங்கா திறக்கப்படுவதே சிறந்தது. அதற்குள், பூங்காவில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

Next Story