சத்தியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: 2-வது நாளாக பெண்கள் போராட்டம்


சத்தியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: 2-வது நாளாக பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2020 6:34 AM IST (Updated: 12 Sept 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 2-வது நாளாக பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பந்தலுக்குள் அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம்-கோவை ரோட்டில் உள்ள காந்திநகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடை முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பெண்கள் நேற்று முன்தினம் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர். இதற்காக டாஸ்மாக் கடை அருகே சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஒரு சரக்கு வாகனத்தில் நேற்று பகல் 11 மணி அளவில் வந்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் உள்ளே ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து சென்றனர். எனினும் தொடர்ந்து போராட்டம் நீடித்தது. மதியம் பந்தலுக் குள்ளேயே உணவு சமைத்து பெண்கள் அனைவரும் சாப்பிட்டனர்.

கலெக்டரிடம் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் போராட்ட குழுவில் இருந்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ, கோணமூலை ஊராட்சி தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சி.கதிரவனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கலெக்டர் அவர்களிடம் கூறும்போது, ‘டாஸ்மாக் கடை திறப்பது சம்பந்தமான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது’ என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட போராட்ட குழுவினர் அங்கிருந்து சென்றனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு நடத்திய போராட்டத்தை பெண்கள் கைவிட்டு இரவு 7மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story