கொரோனா பரவலால் எளிமையாக கொண்டாட்டம் மைசூரு தசரா விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு மந்திரி பேட்டி


கொரோனா பரவலால் எளிமையாக கொண்டாட்டம் மைசூரு தசரா விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2020 3:42 AM IST (Updated: 13 Sept 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படுகிறது என்றும், மக்கள் கூட அனுமதி இல்லாததால் தசரா விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்தார்.

மைசூரு,

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையையொட்டி 10 நாட்கள் உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 10 நாட்கள் தசரா விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தை ரத்து செய்துள்ளது. அதே வேளையில் அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வலம் எளிமையாக நடத்த தீர்மானித்துள்ளது.

இதனால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில கூட்டுறவுத் துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எஸ்.டி.சோமசேகர் தலைமையில் தசரா விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

மந்திரி தலைமையில் ஆலோசனை

இந்த நிலையில் மைசூரு அரண்மனை மண்டலி அலுவலகத்தில் மைசூரு தசரா விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமை தாங்கினார். இதில் மந்திரி சி.டி.ரவி, எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், கலெக்டர் ஷரத், மேயர் தஸ்நீமா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மைசூரு தசரா விழா தொடக்க விழா மற்றும் 10 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும், ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக எந்தந்த யானைகளை அழைப்பது என்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரண்மனை வளாகத்தில் எளிமையாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். மைசூரு தசரா விழா அக்டோபர் 17-ந்தேதி காலை 7.45 மணி முதல் காலை 8.15 மணிக்குள் மைசூரு சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கிவைக்கப்படுகிறது. இந்த தசரா விழாவை கொரோனா போராளி ஒருவர் மூலம் தொடங்கிவைக்கப்படுகிறது.

இதற்காக 5 கொரோனா போராளிகளின் பெயர்களை இறுதி செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதாவது டாக்டர் மஞ்சுநாத் அல்லது டாக்டர் ரவி ஆகியோர் தசரா விழாவை தொடங்கிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுபற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தசரா விழாவை 5 பேரில் யார் தொடங்கிவைப்பார் என்பதை முதல்-மந்திரி எடியூரப்பா தான் முடிவு செய்வார்.

அபிமன்யு தலைமையில் கஜபடை

ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது 750 கிலோ தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து சென்று வந்தது. வயோதிகம் காரணமாக அர்ஜுனாவுக்கு பதிலாக அபிமன்யு யானை இந்த ஆண்டு தங்க அம்பாரியை சுமந்து செல்லும். அந்த யானை தான் கஜபடையை வழிநடத்தும் கேப்டனாக செயல்படும். அதற்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும்.

தசரா விழாவின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலிலும், அரண்மனையிலும் மட்டுமே நடத்தப்படும். முக்கிய நிகழ்ச்சிகளில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது அதுவும் ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்படும். அரண்மனை வளாகத்தில் நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 2 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

நேரடி ஒளிபரப்பு

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில் மொத்தம் 5 யானைகள் இடம்பெறுகின்றன. அதாவது அபிமன்யு, கோபி, விக்ரம், விஜயா, காவேரி ஆகிய யானைகள் இதில் கலந்துகொள்ள உள்ளன. தசரா விழாவையொட்டி வழக்கம் போல் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்படும். கொரோனா பரவல் காரணமாக தசரா விழா நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வர அனுமதி இல்லை. இதை கருத்தில் கொண்டு ஆன்-லைனில் தசரா விாா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவும் அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story