போதைப்பொருள் விவகாரத்தில் சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி போலீஸ் முன்பு ஆஜர்


போதைப்பொருள் விவகாரத்தில் சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி போலீஸ் முன்பு ஆஜர்
x
தினத்தந்தி 12 Sep 2020 10:15 PM GMT (Updated: 12 Sep 2020 10:15 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது அவர் தன்னிடம் இருந்த வீடியோ, புகைப்பட ஆதாரங்களை போலீசாரிடம் வழங்கினார்.

பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருப்பது, அவர் இலங்கையில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்றது குறித்து சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி குற்றச்சாட்டு கூறி இருந்தார். மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகானின் ஆதரவாளர் சேக் பாசில் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வருவது பற்றியும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இதையடுத்து, போதைப்பொருள் விவகாரம் குறித்து விசாரணைக்கு ஆஜராகி, போலீசாரிடம் தகவல் தெரிவிக்கும்படி பிரசாந்த் சம்பரகிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று காலையில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு பிரசாந்த் சம்பரகி சென்றார். அவரிடம், போதைப்பொருள் விவகாரம் குறித்தும், நடிகை சஞ்சனா கல்ராணி, சேக் பாசில் உள்ளிட்டவர்கள் குறித்தும் உதவி போலீஸ் கமிஷனர் கவுதம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டார்.

ஆவணங்களை வழங்கினார்

அப்போது தன்னிடம் இருந்த ஆதாரங்களையும் அவர் போலீசாரிடம் வழங்கினார். குறிப்பாக போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு எதிராக சில புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அவர் வழங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் போதைப்பொருள் சம்பந்தமாக ஏராளமான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் பிரசாந்த் சம்பரகி வழங்கி உள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் தங்களிடம் ஏற்கனவே இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அடுத்த வாரம் 18-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகி போதைப்பொருள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை வழங்கும்படி பிரசாந்த் சம்பரகிக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பின்னர் விசாரணை முடிந்து திரும்பி வந்த பிரசாந்த் சம்பரகி நிருபர்களிடம் கூறியதாவது:-

மீண்டும் விசாரணைக்கு ஆஜராக...

போதைப்பொருள் விவகாரத்தில் நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை போலீசாரிடம் வழங்கி உள்ளேன். பல்வேறு விவகாரம் குறித்து போலீசார் கேள்வி கேட்டு தகவல்களை பெற்றுக் கொண்டனர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் யாரை பற்றியும் ஆதாரங்களை வழங்கவில்லை. ஒட்டு மொத்தமாக போதைப்பொருள் விவகாரம் சம்பந்தமாக என்னிடம் இருந்த ஆவணங்களை வழங்கி இருக்கிறேன். ஆனால் கூடுதல் ஆவணங்களையும் வழங்கும்படியும், இதற்காக வருகிற 18-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படியும், இதற்காக சம்மன் அனுப்புவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நான் எந்த கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பது கூறப்படுவது சரியல்ல. போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நான் கூறவில்லை. அவரது ஆதரவாளர் சூதாட்ட விடுதி ஏஜென்டாக இருப்பதால், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தான் கூறி வருகிறேன். ஜமீர் அகமதுகான் எனக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story