முககவசம் அணியும் விவகாரத்தில் காவல்துறையினர் எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது நாராயணசாமி எச்சரிக்கை


முககவசம் அணியும் விவகாரத்தில் காவல்துறையினர் எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Sept 2020 4:40 AM IST (Updated: 13 Sept 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியும் விவகாரத்தில் காவல்துறையினர் எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு தேவையான கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடமாடும் வாகன பரிசோதனை வாகனங்களை 25 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

இப்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மொத்த பரிசோதனையில் பாதிப்பு 11 சதவீதம். குணமடைந்து வீடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அறிகுறி உள்ளவர்களை சிகிச்சைக்கு அனுமதித்ததுதான். இறப்பு விகிதத்தை குறைக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிக பாதிப்பு அடைகிறார்கள்.

ஆக்சிஜன் வசதி

தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியுடன் வருபவர்களின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த கூறியுள்ளோம். 2 மருத்துவ கல்லூரிகளில் அதை செய்துள்ளனர். மீதி கல்லூரிகளில் விரைவாக செய்ய கூறியுள்ளோம். தனியார் கல்லூரிகள் ஒதுக்கும் 300 படுக்கையில் 100 ஆக்சிஜன் வசதி இருக்கவேண்டும்.

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் அதிக அளவில் மருத்துவம் பார்க்கின்றனர். அங்கு 900 படுக்கைகள் அமைக்க உத்தரவிட்டு வேலைகள் தொடங்க உள்ளன. வென்டிலேட்டர்கள் தேவைப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி, ஜிப்மரில் சேர்க்கப்படுகின்றனர். தேவையான மருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தவறாக பயன்படுத்தக்கூடாது

திருமணம், இறப்பு, பொது நிகழ்ச்சிகளால் கொரோனா அதிக அளவில் பரவுகிறது. கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்க கூறியுள்ளோம்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் இவ்வளவு பேருக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று யாரும் கூறவில்லை. காவல்துறையினரில் சிலர் நான்தான் அபராதம் விதிக்கக் கூறினேன் என்று கூறி களங்கம் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அது அரசின் முடிவு. எனது தனிப்பட்ட முடிவு அல்ல. காவல்துறை பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையில்லாமல் தொல்லை கொடுக்கக் கூடாது. எனது பெயரை தவறாக பயன்படுத்தக் கூடாது.

பிரதமர் பொறுப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு, தேர்வை ரத்து செய்யவேண்டும். நீட் தேர்வு மத்திய அரசு பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. இதனால் நமது பிள்ளைகள் தேர்வு எழுத பயப்படுகிறார்கள். வினாத்தாள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். நேற்று மதுரையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துள்ளார். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி, சம்பந்தப்பட்ட துறை மந்திரி, பிரதமர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அநியாயமாக இளைஞர்களின் வாழ்க்கை பாழாகிறது.

இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நாம் சென்டாக் முறையில் பிளஸ்-2 மதிப்பெண் மூலம் மருத்துவ இடம் தந்து வந்தோம். இதில் ஏழை, கிராமப்புற, நடுத்தர குடும்பத்தினர் என அனைவருக்கும் இடம் கிடைத்தது. இப்போது கிடைப்பதில்லை. இதுதொடர்பாக பிரதமருக்கு 3 கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு பதில் இல்லை. இதன் விளைவை மத்திய அரசு கண்டிப்பாக சந்தித்தாக வேண்டும்.

புதுவை மக்கள் பாரதீய ஜனதாவுக்கு சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். இதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story