அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 14 Sept 2020 5:25 AM IST (Updated: 14 Sept 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

அந்தியூர்,

அந்தியூர், பர்கூர், தட்டகரை வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதே போல இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஷ்மி ஜு விஸ்வநாதன் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் அந்தியூர் வனச்சரகர் உத்தர சாமி, பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், தட்டகரை வனச்சரகர் பழனிசாமி மற்றும் வன ஊழியர்கள், வன ஆர்வலர்கள், ஈரோடு, சேலம், கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்குவர். இவர்களுக்கு நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

2 நாட்கள்...

இதைத்தொடர்ந்து நேற்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. அந்தியூர், பர்கூர், தட்டக்கரை ஆகிய வனப்பகுதிக்குள் கணக்கெடுப்பு குழுவினர் நேற்று சென்று வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிக பூக்கள் பூத்து இருக்கக்கூடிய செடி, கொடிகள் வளர்ந்து உள்ள பகுதி, நீர்நிலை உள்ள பகுதிக்கு சென்று பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளை நேரில் பார்த்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் கணக்கெடுப்பு நடத்துகிறோம். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கணக்கெடுப்பின் முடிவில் தான் வனப்பகுதியில் எத்தனை பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன என்பது தெரியவரும்’ என்றனர்.

Next Story