நாகர்கோவில் நகரில் சாலைகள் சீரமைக்கும் பணி மும்முரம் மாநகராட்சி- நெடுஞ்சாலைத்துறை இணைந்து நடவடிக்கை


நாகர்கோவில் நகரில் சாலைகள் சீரமைக்கும் பணி மும்முரம் மாநகராட்சி- நெடுஞ்சாலைத்துறை இணைந்து நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2020 7:10 AM IST (Updated: 15 Sept 2020 7:10 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகரில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து செய்து வருகின்றன.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நகரில் உள்ள தெருக்கள் மற்றும் பிரதான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வெயில் நேரங்களில் இந்த சாலைகள் புழுதி பறக்கும் மண் சாலைகளாகவும், மழை நேரங்களில் சேறும், சகதியும் நிறைந்த வயல்வெளிகளைப் போன்றும் காட்சி தருகின்றன.

இதனால் இந்த சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் முதல், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பஸ்கள், கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள் வரை மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சமமற்ற சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களின் சக்கரங்கள் புதைந்துபோவதும், அதனை மீட்க வாகன ஓட்டிகள் சிரமப்படுவதையும் காண முடிகிறது.

கருப்புக்கொடி போராட்டம்

எனவே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தினந்தோறும் மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் வருகிற 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வருகிறார். 23-ந் தேதி நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் வருகை தருவதற்கு முன் நாகர்கோவில் நகரின் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவில்லை என்றால் முதல்-அமைச்சர் வருகையின்போதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

சாலை சீரமைப்பு தொடங்கியது

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா வரையிலான சாலையை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மறுபகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்தன.

இதனால் கலெக்டர் அலுவலக சாலை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி சந்திப்பு செல்லும் சாலை, கோர்ட்டு ரோடு போன்றவற்றில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எந்தெந்த சாலைகள்?

இதேபோல் நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு முதல் அண்ணா சிலை சந்திப்பு வரையும், அண்ணாசிலை சந்திப்பு முதல் டிஸ்ட்டில்லரி ரோடு, டிஸ்ட்டில்லரி ரோடு முதல் டதி பள்ளி சந்திப்பு வரையிலும் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள இருக்கிறது.

மேற்கண்ட சாலைகளில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை நிறைவு செய்து மாநகராட்சியிடம் ஒப்படைத்ததும் சாலை சீரமைப்பு பணி தொடங்கும் என்று மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் டென்னிசன் ரோட்டிலும் பள்ளமாக கிடக்கும் பகுதியில் ஜல்லி மற்றும் மணல் சேர்த்து சமதளமாக்கும் பணிகளும் நேற்று நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை

இதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் நாகர்கோவில் நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக நாகர்கோவில் அண்ணா சிலையில் இருந்து மணிமேடை சந்திப்பு வரையிலான பாலமோர் சாலையில் ஜல்லி அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவில் மேற்கொள்ளப்பட்டது. மணிமேடை சந்திப்பு முதல் வேப்பமூடு சந்திப்பு வரையிலும் ஜல்லி அமைக்கும் பணி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து பீச்ரோடு சந்திப்பு முதல் இந்துக்கல்லூரி சாலையிலும், ராமன்புதூர் சாலை, புன்னைநகர் சாலை, மத்தியாஸ் வார்டு முதல் ஆசாரிபள்ளம் செல்லும் சாலை போன்றவற்றையும் சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் வேப்பமூடு சந்திப்பு முதல் கோட்டார் வரையிலான சாலையை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒப்படைத்ததும், அதை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story