திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் 2 மணி நேரம் போலீசார் சோதனை


திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் 2 மணி நேரம் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 15 Sep 2020 3:29 AM GMT (Updated: 15 Sep 2020 3:29 AM GMT)

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவில் உள்ளது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள். மேலும் கோவிலுக்கு அருகே வணிக வளாகங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. எனவே, கோவில் அமைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.

பக்தர்கள் வெளியேற்றம்

இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில், திண்டுக்கல் வடக்கு போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மேலும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்த பக்தர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் திடீரென 20-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்கு விரைந்தனர். அதன்பிறகு வெடிகுண்டுகளை கண்டறியும்சோதனைதொடங்கியது.

2 மணி நேரம் சோதனை

இதில் போலீஸ் மோப்பநாய் லீமா மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் போலீசார் கோவில் வளாகம் முழுவதும் சோதனையிட்டனர். கோவிலில் இருக்கும் அனைத்து சன்னதிகள், உள் மற்றும் வெளிப்பிரகாரம், கோவிலின் மேல்பகுதி, ராஜகோபுரம், கோவில் நிர்வாக அலுவலகம் உள்பட இடங்களிலும்சோதனை நடத்தினர்.

இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆனால், மர்ம நபர் தொலைபேசியில் கூறியது போன்று வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. அதன்பின்னரே போலீசாரும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். அதேநேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக, அபிராமி அம்மன் கோவிலில் போலீசார் நடத்திய சோதனையால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே கோவிலில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறிய நபர் குறித்து, திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஆய்வு செய்யப்படுகிறது.

Next Story
  • chat