விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் படுகாயம் பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு


விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் படுகாயம் பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sept 2020 4:19 AM IST (Updated: 16 Sept 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி(வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் உஷாராணி(40). உறவினரான இவர்கள் 2 பேரின் குடும்பத்தினர் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரி, உஷாராணியிடம் இடப்பிரச்சினை சம்பந்தமாக கேட்டுள்ளார். அப்போது உஷாராணி, நீ யார் அதை கேட்பதற்கு? என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த உஷாராணியின் உறவினர்கள் பரிமளா(30), கோவிந்தம்மாள்(60), ராணி(55), முருகேசன்(22), ராகேஷ்(25) ஆகியோருக்கும், மகேஸ்வரியின் உறவினர்கள் சரஸ்வதி(22), சங்கர்(40), தங்கபாண்டி(25), தம்பிதுரை(23) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

11 பேர் மீது வழக்கு

வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த உஷாராணி, ராணி, மகேஸ்வரி, சங்கர் ஆகிய 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் உஷாராணி, பரிமளா, கோவிந்தம்மாள், ராணி, முருகேசன், ராகேஷ் மற்றும் மகேஸ்வரி, சரஸ்வதி, சங்கர், தங்கபாண்டி, தம்பிதுரை ஆகிய 11 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story