கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் முற்றுகை பெண்ணுக்கு உதவித்தொகையாக கிடைத்த பணத்தில் ரூ.15 ஆயிரம் பெற்றதாக புகார்


கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் முற்றுகை பெண்ணுக்கு உதவித்தொகையாக கிடைத்த பணத்தில் ரூ.15 ஆயிரம் பெற்றதாக புகார்
x
தினத்தந்தி 16 Sep 2020 12:45 AM GMT (Updated: 16 Sep 2020 12:45 AM GMT)

ஜெயங்கொண்டம் அருகே பெண்ணுக்கு உதவித்தொகையாக கிடைத்த பணத்தில் ரூ.15 ஆயிரம் பெற்றதாக புகார் தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தியின் மனைவி குமுதம்(வயது 50). இவர்களுக்கு குழந்தை இல்லை. கலியமூர்த்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குமுதம் அப்பகுதியில் உள்ள கூரை வீட்டில் தனியார் வசித்து வருகிறார். அந்த வீடு சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது.

இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து விதவை உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணம் அவருடைய பெயரில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. வங்கியில் அவருடைய கணக்கு எண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 7 எண்ணிக்கையில் இருந்து 16 எண்ணிக்கை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அது பற்றிய தகவலை குமுதம் அரியாததால், அவருடைய வங்கி கணக்கில் விதவை உதவித்தொகை அரசால் செலுத்தப்படுவது பற்றிய விவரம் அவருக்கு தெரியவில்லை. பின்னர் அவர் வங்கிக்கும் செல்லவில்லை.

ரூ.15 ஆயிரம் பெற்றதாக...

இந்நிலையில் தற்போது அவருக்கு பணம் தேவைப்பட்டதால் அவர் தனது தங்கை மகனான மூர்த்தியுடன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் திருஞானத்திடம் சென்று, தனது வங்கி கணக்கில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதற்காக கேட்டுள்ளார். அப்போது அவருக்கு ரூ.500 கொடுக்கப்பட்டதாகவும், வங்கியில் இருந்து எடுக்கும் பணத்தில் தனக்கு பாதி தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி வங்கிக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர், அங்கு மூர்த்தியையும் அவரது சித்தி குமுதத்தையும் வரவழைத்து பணம் எடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து, குமுதத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து பணம் எடுத்து கொடுத்ததற்காக, மூர்த்தியிடம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். மூர்த்தி ரூ.10 ஆயிரம் கொடுத்தபோது, அந்த பணம் போதாது என்று கூறி ரூ.5 ஆயிரம் கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது. வங்கி கணக்கில் மீதமிருக்கும் ரூ.43 ஆயிரத்தை எடுத்துக் கொடுக்கும்போது அதிலும் தனக்கு பாதி தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலரை முற்றுகை

இந்த தகவல் நேற்று கிராம மக்களிடம் வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கிராம நிர்வாக அலுவலர் வந்த பின்னர், அலுவலகத்தையும் அவரையும் முற்றுகையிட்டனர். மேலும் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், அவர் வாங்கிய தொகையை திரும்ப குமுதத்திடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள், போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து தாசில்தார் கலைவாணன், துணை தாசில்தார் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களிடம் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி குமுதம் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிய பின்னர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நடவடிக்கை எடுக்க பரிந்துரை

இது குறித்து தாசில்தார் கலைவாணனிடம் கேட்டபோது, நடந்த சம்பவம் குறித்து குமுதமும், பொதுமக்களும் கிராம நிர்வாக அலுவலர் திருஞானம் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் திருஞானம் மற்றும் குமுதத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கிராம நிர்வாக அலுவலர் திருஞானம் பணம் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Next Story
  • chat