100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 9 பேருக்கு கொரோனா 3 நாட்களுக்கு கடைகளை அடைக்க வருவாய் அதிகாரி உத்தரவு


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 9 பேருக்கு கொரோனா 3 நாட்களுக்கு கடைகளை அடைக்க வருவாய் அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 16 Sept 2020 6:42 AM IST (Updated: 16 Sept 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம் பரிசோதனையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகளை 3 நாட்களுக்கு அடைக்க மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகில் நாகனூர் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 64 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 2 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நாகனூர் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நாகனூரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது சளி, இருமல் இருந்தால் கொரோனா இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் அச்சம் அடைந்து மருத்துவ முகாமிற்கு பொதுமக்கள் யாரும் வரவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட வருவாய் அதிகாரி நாகூர் பகுதியில் உள்ள கடைகளை 3 நாட்களுக்கு அடைக்க உத்தரவிட்டார்.

கடைகள் அடைப்பு

அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அறிவுரை கூறி மருத்துவ சிறப்பு முகாமிற்கு அழைத்து வரவேண்டும் என வருவாய் அலுவலர் மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, ஊராட்சி தலைவர் லதா ராஜா, தோகைமலை வருவாய் ஆய்வாளர் நீதிராஜன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவை தொடர்ந்து நாகனூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story