கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு சம்பளம் தரவில்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு சம்பளம் தரவில்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 16 Sep 2020 2:11 AM GMT (Updated: 16 Sep 2020 2:11 AM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று கூறி செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணிக்கு எடுக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் அதிகமான செவிலியர்கள் ஒப்பந்த முறையில் 2 மாதங்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாங்கள் கொரோனா பேரிடர் கால கட்டத்தில் தடுப்பு பணிக்காக எங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னார்வத்துடன் அரசின் நோய்த்தொற்று தடுப்பு கவனிப்பு மையத்தில் பணி செய்து கொண்டிருக்கிறோம். தற்போது எங்கள் பணிகள் நிறைவடைய போவதாக அறிகிறோம். இதனால் நாங்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சம்பளம் தரவில்லை

கொரோனா தடுப்பு பணிக்கு குறைவான சம்பளம் என்றாலும் அதை பொருட்படுத்தாமல் ஏற்கனவே பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு பணிக்கு வந்தோம். தற்போது நாங்கள் ஏற்கனவே பார்த்த வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் எங்களுக்கு கொடுப்பதாக கூறிய சம்பளம் இன்னும் தரவில்லை. எனவே தரவேண்டிய சம்பளத்தை உடனே தரவேண்டும்.

அதோடு எங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பணிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் சுகாதாரம் சார்ந்த பணிகளிலோ எங்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story