ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; இளம்பெண் பலி


ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; இளம்பெண் பலி
x
தினத்தந்தி 16 Sept 2020 8:16 AM IST (Updated: 16 Sept 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; இளம்பெண் பலி காதலன் கண் முன்பு பரிதாபம்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கீழ் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகள் உஷா (வயது 18). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வடகரை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடையில் காதலாக மாறியது. ரவிச்சந்திரனும், பெங்களூருவில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் ராயக்கோட்டைக்கு வந்த உஷா அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் உஷா ஓசூருக்கு பஸ்சில் சென்றார். அப்போது ரவிச்சந்திரன் பெங்களூருவில் இருந்து ஸ்கூட்டியில் ஓசூர் வந்தார். பின்னர் ரவிச்சந்திரன் உஷாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் ராயக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கருக்கனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை ரவிச்சந்திரன் முந்தி சென்றார்.அப்போது ராயக்கோட்டையில் இருந்து உத்தனப்பள்ளி நோக்கி தேவசானப்பள்ளியைச் சேர்ந்த பிரபாகரன் (27) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். மோட்டார்சைக்கிளும், ரவிச்சந்திரன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டியும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பிரபாகரன், ரவிச்சந்திரன், உஷா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி உஷா மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த உஷா உள்ளிட்ட 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பிரபாகரன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் கண் முன்பே காதலி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story