நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி


நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
தினத்தந்தி 16 Sep 2020 12:14 PM GMT (Updated: 16 Sep 2020 12:14 PM GMT)

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கடந்த 13 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நீ்ட் நுழைவுத் தேர்வு நடைபெற்ற நிலையில், 12 ஆம் தேதியன்று நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பல்வேறு அரசியல் தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று காலத்தில் நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத கட்டளையிடுவது வேதனையளிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார். அதேசமயம், “சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டியதில்லை. அவரை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடலாம்” என வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறு பேரும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

இதற்கிடையில் சூர்யாவின் கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், நீட் தேர்வு பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதால் நீதியரசர்கள் இதை பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story
  • chat