சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய வழக்கு: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கு கொரோனா - விசாரணைக்கு ஆஜராக வந்தவர் திருப்பி அனுப்பப்பட்டார்


சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய வழக்கு: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கு கொரோனா - விசாரணைக்கு ஆஜராக வந்தவர் திருப்பி அனுப்பப்பட்டார்
x
தினத்தந்தி 16 Sep 2020 11:20 PM GMT (Updated: 16 Sep 2020 11:20 PM GMT)

சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் விசாரணை நடத்தி வரும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் விசாரணைக்கு ஆஜராக வந்த சுருதி மோடி திருப்பி அனுப்பப்பட்டார்.

மும்பை,

இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது தம்பி சோவிக் ஆகியோரும் அடக்கம்.

இந்தநிலையில் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சுருதி மோடியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பி இருந்தனர். அதனை ஏற்று சுருதி மோடி நேற்று காலை 10 மணி அளவில் மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். ஆனால் அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அவர் வீட்டுக்கு திரும்பி அனுப்பப்பட்டார்.

இதற்கான காரணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வெளியிட்டனர். விசாரணை அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஆன்டிஜென் பரிசோதனையில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Next Story