செந்துறையில், குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பஸ் கிளீனர்


செந்துறையில், குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பஸ் கிளீனர்
x
தினத்தந்தி 17 Sep 2020 5:52 AM GMT (Updated: 17 Sep 2020 5:52 AM GMT)

செந்துறையில், குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பஸ் கிளீனர் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்கினார்.

செந்துறை,

நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள சரளைபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). முருகேசன் தனியார் பஸ்சில் கிளீனராக உள்ளார். இவர் நேற்று செந்துறையில் உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது வாங்கி குடித்தார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செல்போன் கோபுரம்

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன்னை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி குடிபோதையில் பஸ் நிலையம் அருகிலுள்ள சுமார் 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஏறினார். அங்கு சுமார் 100 அடி உயரத்துக்கு சென்ற அவர் திடீரென தான் அணிந்து இருந்த சட்டையை கழற்றி கீழே எறிந்தார். மேலும் போதை தெளியும் வரை தற்கொலை மிரட்டல் விடுத்தவாறும், அழுது கொண்டும் இருந்தார். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

மீட்பு

இதுகுறித்து நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி முருகேசனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே போதை கொஞ்சம் தெளிந்தவுடன் முருகேசன் தானாகவே கீழே இறங்க தொடங்கினார். அவரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். அப்போது அவர் எனக்கு அவமானமாக உள்ளது என தேம்பி, தேம்பி அழுதார். அவருக்கு கீழே நின்ற பொதுமக்கள் ஆறுதல் கூறினர். இதையடுத்து அவர் நத்தம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story