மகாளய அமாவாசை: பவானி கூடுதுறை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது பலத்த போலீஸ் பாதுகாப்பு


மகாளய அமாவாசை: பவானி கூடுதுறை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 4:30 AM IST (Updated: 18 Sept 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசை தினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக பவானி கூடுதுறை வெறிச்சோடியது.

பவானி,

அமாவாசை தினங்களில் சிறப்புக்கு உரியவை ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆன்மா ஆசி வழங்கும் என்பது நம்பிக்கை.

எனவே இந்த முக்கிய அமாவாசை நாட்களில் புனித தலங்களில் உள்ள புனித நதிகளில் நீராடி திதி, தர்ப்பணம் செய்வது நடைமுறை. தமிழகத்தில் திதி செய்ய மிகவும் சிறந்த இடமாக கருதப்படுவது பவானி கூடுதுறை. காவிரி, பவானி ஆகியவை இணையும் இந்த கூடுதுறையில் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி (அமிர்த நதி) சங்கமிப்பதாக ஐதீகம். எனவே பவானி கூடுதுறை திரிவேணி சங்கமமாக திகழ்கிறது. இங்கு திதி, தர்ப்பணம் செய்து காவிரியில் புனித நீராடி, அங்குள்ள சங்கமேஸ்வரர்- வேதவல்லி தாயாரை தரிசித்தால் அனைத்து விதமான சந்தோஷங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே மகாளய அமாவாசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். நேற்று புரட்டாசி மாதம் பிறந்தது. முதல் நாளிலேயே சிறப்புக்கு உரிய மகாளய அமாவாசை வந்தது. எனவே பல லட்சம் பேர் பவானி கூடுதுறையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் திதி, தர்ப்பணம் செய்த தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து இருந்தார். அதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை தலைமையில் போலீசார் மாவட்டத்தில் பவானி, காவிரி கரையோரங்களில் பொது மக்கள் கூடாமல் இருக்க தடைகள் ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

பவானி கூடுதுறையிலும் நேற்று திதி, தர்ப்பணம் செய்ய பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகம் சார்பில் நுழைவு வாயில் பகுதியிலேயே தடை அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்தது. கூடுதுறைக்கு செல்லும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

வழக்கமாக நெரிசலில் சிக்கி வாகனங்கள் நெருக்கிக் கொண்டு இருக்கும் வாகன நிறுத்த பகுதி வெறுமனே கிடந்தது. அதை தாண்டி கூடுதுறை பூங்கா பகுதியில் கோவில் பணியாளர்கள், யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை தினங்களில் எங்கு பார்த்தாலும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு இருக்கும் புரோகிதர்கள், அவர்களை சுற்றி தர்ப்பணம் கொடுக்க காத்திருக்கும் பொதுமக்கள், காவிரியில் நீராடிவிட்டு புரோகிதரின் அடுத்த உத்தரவுக்காக பய பக்தியுடன் காத்திருப்பவர்கள் என்று பூங்கா பகுதி, பரிகார மண்டபம் அனைத்தும் மக்கள் கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு இருக்கும். நீராடும் பகுதிகளில் நுழைந்து காவிரியில் புனித நீராடி திரும்பி வருவதே பெரிய விஷயமாக இருக்கும்.

ஆனால் நேற்று மக்கள் நடமாட்டம் எதுவும் இன்றி முழுமையாக வெறிச்சோடி கிடந்தது கூடுதுறை. வழக்கமாக சாப்பிட வரும் காகங்கள் மட்டும் யாரையும் காணவில்லையே என்று மரங்களை சுற்றி வந்து கரைந்து கொண்டு பறந்தன.

அமிர்த லிங்கேஸ்வரர், ஆயிர லிங்கேஸ்வரர் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனாவால் கூடுதுறை முடங்கி கிடந்தது.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வரிசையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பிறகே கோவிலுக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மகாளய அமாவாசையையொட்டி சங்கமேஸ்வரர்- வேதவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

Next Story