வேலை வழங்குவதில் பாரபட்சம்: திருமயம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்


வேலை வழங்குவதில் பாரபட்சம்: திருமயம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2020 6:39 AM IST (Updated: 18 Sept 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறியும், அனைவருக்கும் வேலை வழங்கக்கோரியும் திருமயம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குளிபிறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, முறையாக குடிநீரும் வழங்கப்படுவதில்லையாம்.

இதனை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரியும் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் குளிபிறை பகுதியில் அவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குளிபிறை 3-வது வார்டு உறுப்பினர் பொன்னழகி தலைமை தாங்கினார்.

பேச்சு வார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story