புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தஞ்சையில் மீன் சந்தை வெறிச்சோடியது


புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தஞ்சையில் மீன் சந்தை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 18 Sept 2020 7:52 AM IST (Updated: 18 Sept 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தஞ்சையில் மீன்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மீன்களின் விலை குறைவாக இருந்தது. விற்பனையும் குறைவாகவே இருந்தது.

தஞ்சாவூர்,

கொரோனா ஊரடங்கு காரணமாக தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் இயங்கிவந்த மீன் மார்க்கெட் இன்னும் திறக்கப்படவில்லை. இதையடுத்து மீன் கடைகள் கொண்டிராஜபாளையம் பகுதியிலும், மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட் பகுதிகளிலும் இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கொண்டிராஜபாளையம் பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

வெறிச்சோடின

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் மக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் நேற்று தொடங்கியது. புரட்டாசி மாத தொடக்கநாளிலேயே மகாளய அமாவாசையும் வந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

இதனால் இந்த மீன் மார்க்கெட் பகுதியிலும் நேற்று கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வழக்கத்தை விட நேற்று குறைந்தளவிலேயே வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனர் பொதுமக்களும் ஒரு சிலரே வந்து மீன்கள், நண்டு போன்றவற்றை வாங்கி சென்றனர்.

விலையும் குறைந்தது

நேற்று அயிலை மீன் கிலோ ரூ.100-க்கும், கெண்டை மீன் ரூ.160-க் கும், இறால் ரூ.250-க்கும், நண்டு ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது இதேபோல் மற்ற மீன்களும் வழக்கம் போல் விற்ற விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக இருந்தாலும் விற்பனை குறைவாகவே காணப்பட்டது.

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், “புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் நேற்று மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. பொது மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட குறைவாகவே கடைகள் போட்டாலும் விற்பனையும் குறைவாகவே இருந்தது” என்றனர்.

Next Story