விவசாயியை கொல்ல முயற்சி: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியை கொல்ல முயற்சி: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 9:54 AM IST (Updated: 18 Sept 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே விவசாயியை கொல்ல முயன்ற வழக்கில் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள கெஜகோம்பை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சதீஷ்குமார் (வயது 27). சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (36). வக்கீல். இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஏற்பட்ட தகராறில் ரவிக்குமார் மற்றும் சிலர் சதீஷ்குமாரை கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதுதொடர்பாக எருமப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார், பிரபு (28), தசரதன்(25), படையப்பா (23), கார்த்தி (24), மாணிக்கம் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களில் வக்கீல் ரவிக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் மாதேஸ்வரன் வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் ரவிக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார். மேலும் சதீஷ்குமாருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்கவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மீதமுள்ள 5 பேரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே அவர்கள் 5 பேரும் விடுவிக்கப்பட்டனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட வக்கீல் ரவிக்குமாரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

Next Story