மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் - தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் - தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Sept 2020 8:00 PM IST (Updated: 18 Sept 2020 7:40 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் என்றும், தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. தொழிற்சங்கம் சார்பில் தொ.மு.ச. ரவுண்டானா அருகில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி உருவ சிலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொ.மு.ச. பேரவை இணை பொது செயலாளரும், என்.எல்.சி. தொ.மு.ச. பொது செயலாளருமான சுகுமார் வரவேற்றார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. என்.எல்.சி. தொ.மு.ச. தலைவர் வீர ராமச்சந்திரன், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, நெய்வேலி நகர தி.மு.க. பொறுப்புக் குழு தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்த படி, காணொலி காட்சி வாயிலாக கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் இருக்கும் அரசாக இருந்தாலும், மாநிலத்தை ஆளும் அரசாக இருந்தாலும் தொழிலாளர் விரோத அரசுகளாக இருக்கின்றன. தொழிலாளர்களைப் பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த கொரோனா காலத்திலும், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைத்தான் மத்திய அரசு தீட்டுகிறது. அதனை வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இரண்டு அரசுகளும் செயல்படுகின்றன.

இந்த கொரோனா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்கள், பாட்டாளிகள், அன்றாடக் கூலிகள்தான். மாநில அரசு, மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்திலும் பேசினேன். முதல்-அமைச்சரின் கல் மனது கரையவே இல்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழிலாளர்கள், விவசாயிகள் என்றாலே பிடிக்காது. ஆனால், நானும் ஒரு விவசாயி தான் என்று சொல்லிக் கொள்வார். எட்டுவழிச் சாலைக்காகப் போராடிய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைப்பார்.

இப்போது நாட்டில் பெரிய பிரச்சினையாக இருப்பது நீட் தேர்வு. அதன் காரணமாக மாணவ-மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அது தற்கொலைகள் அல்ல, மத்திய, மாநில அரசுகள் நிகழ்த்திய கொலைகள். மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயார் ஆகிவிட்டார்கள். அதற்கான தேர்தல் பணிகளை நாம் முன்னெடுப்போம். பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை, கருணாநிதி ஆட்சியை அமைக்க அனைவரும் தயாராவோம்.

பேரறிஞர் அண்ணாவின் அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் கனவுகளை எல்லாம் நனவாக்க அவருடைய நினைவிடத்தில் வெற்றிமாலையைச் சமர்ப்பிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா வழிநின்று கருணாநிதி வழி நின்று நம்முடைய பயணத்தைத் தொடர்ந்திடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேரவை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். மேலும் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், எம்.பி., துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., தொ.மு.ச. பேரவை தலைவர் சுப்புராமன், பேரவை பொருளாளர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜவன்னியன், வெங்கட்ராமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, தமிழரசன், முன்னாள் நகர செயலாளர்கள் நாகலிங்கம், புகழேந்தி, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் ஆண்ட குருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, தொ.மு.ச.துணை தலைவர்கள், பகுதி செயலாளர்கள், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள், சார்புஅணி நிர்வாகிகள், ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story