உத்தவ் தாக்கரே மந்திரி சபையில் இதுவரை 11 பேர் பாதிப்பு மராட்டியத்தில் மேலும் 2 மந்திரிகளுக்கு கொரோனா


உத்தவ் தாக்கரே மந்திரி சபையில் இதுவரை 11 பேர் பாதிப்பு மராட்டியத்தில் மேலும் 2 மந்திரிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Sep 2020 11:39 PM GMT (Updated: 18 Sep 2020 11:39 PM GMT)

மராட்டியத்தில் நிதின் ராவத், ஹசன் முஷ்ரித் ஆகிய மேலும் 2 மந்திரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் உத்தவ் தாக்கரே மந்திரி சபையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த மாநிலத்தில் நேற்று வரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 432 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், போலீசாரையும் கொடிய நோய் துரத்தி வருகிறது.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களையும் நோய் தொற்று விட்டு வைக்கவில்லை. இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கொரோனா புரட்டி எடுத்தது.

மராட்டியத்தை சேர்ந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் நாக்பூரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

மராட்டிய மந்திரிகளான ஜிதேந்திர அவாத் (வீட்டு வசதித்துறை), அசோக் சவான் (பொதுப்பணி), தனஞ்செய் முண்டே (சமூக நீதி), சுனில் கேதார் (கால்நடை பராமரிப்பு), பாலசாகேப் பாட்டீல் (கூட்டுறவு), அஸ்லம் சேக் (ஜவுளி), அப்துல் சத்தார் (கிராம மேம்பாட்டுத்துறை இணை மந்திரி), விஸ்வஜித் கதம் (கூட்டுறவு இணை மந்திரி), சஞ்சய் பான்சோடே (சுற்றுச்சூழல் இணை மந்திரி) ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மாநில மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்து உள்ள அவர், தான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டு உள்ளார்.

63 வயதான நிதின் ராவத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் உள்ளார்.

இதேபோல கிராமப்புற மேம்பாட்டு மந்திரி ஹசன் முஷ்ரீப்பும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கொரோனாவை தோற்கடித்து விரைவில் மக்கள் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து தனிமைப்படுத்தி கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளவும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் நேற்று ஒரே நாளில் 2 மந்திரிகள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்ட மந்திரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பாரபட்சம் இன்றி அனைத்துக்கட்சி மந்திரிகளையும் கொரோனா தாக்கி உள்ளது. தொடர்ந்து மந்திரிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதால், இலாகா சார்ந்த பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story