பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் முற்றுகை

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை, ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெண் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பர்கூர்,
பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டூர் ஊராட்சியில் 16-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 1,600 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த பணியை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக செயல்படுவதாக, புகார் தெரிவித்து நேற்று பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) ஞானசேகரன், கந்திகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்தப்படும். பணிகள் அனைவருக்கும் சரி சமமாக ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமாதானம் அடைந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், குட்டூர் ஊராட்சியில் உள்ள ஆம்பள்ளி, பாய்வட்டம், சின்னசாமிவட்டம், புளியம்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மிகவும் குறைந்த நாட்கள் பணி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழ்ந்து வருகிறோம். இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி எங்களுக்கு ஓரளவிற்கு கை கொடுக்கிறது. அதுவும் சரிவர வழங்கப்படுவதில்லை. குட்டூர் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலருக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, எங்களுக்கு சரியான பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story