போதைப்பொருள் விவகாரம்: 2 நடிகர்கள்-முன்னாள் கவுன்சிலர் போலீசார் முன்பு ஆஜர் 6 மணி நேரம் தீவிர விசாரணை


போதைப்பொருள் விவகாரம்: 2 நடிகர்கள்-முன்னாள் கவுன்சிலர் போலீசார் முன்பு ஆஜர் 6 மணி நேரம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 20 Sept 2020 3:45 AM IST (Updated: 20 Sept 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 2 நடிகர்கள்- முன்னாள் கவுன்சிலர் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் 3 பேரிடமும் 6 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நடிகைகளின் நண்பர்களான ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, பிரதிக் ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, ஆதித்யா அகர்வால், வைபவ் ஜெயின், பிரசாந்த் ரங்கா, பினால்டு ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளார். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர். மேலும் போதைப்பொருட்கள் விவகாரத்தில் கன்னட நட்சத்திர தம்பதி திகந்த், அன்ட்ரிதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். ஆனால் போதிய ஆதாரங்கள் எதுவும் சிக்காத காரணத்தால் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அகுல் பாலாஜி, மற்றொரு நடிகர் சந்தோஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனும், முன்னாள் கவுன்சிலருமான யுவராஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் அகுல் பாலாஜிக்கு சொந்தமான ரெசார்ட்டில் வைத்து விருந்து நிகழ்ச்சிகள் நடந்ததாகவும், இதில் நடிகர்களின் மனைவிகள் கலந்து கொண்டு போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாட்ஸ்-அப் மூலம் சம்மன் அனுப்பி வைத்து இருந்தனர்.

அதன்படி நேற்று பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் அகுல் பாலாஜி, சந்தோஷ்குமார், யுவராஜ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அப்போது 3 பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வாட்ஸ்-அப்பில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து 3 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதைப்பொருள் விற்பனை, கன்னட திரைஉலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அப்போது 3 பேரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சந்தோஷ் குமார், தேவனஹள்ளி அருகே உள்ள 3 படுக்கைகள் கொண்ட வில்லா குறித்த ஆவணங்களையும், அகுல் பாலாஜி, தொட்டபள்ளாப்புராவில் உள்ள ரெசார்ட் குறித்த ஆவணங்களையும் வழங்கியதாக தெரிகிறது.

விசாரணையின் போது சந்தோஷ்குமார், தனக்கும் கைதான வைபவ் ஜெயினுக்கும் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார். தேவனஹள்ளி பகுதியில் உள்ள வில்லாவை வைபவ் ஜெயினுக்கு கொடுத்து இருந்ததாகவும், அந்த வில்லாவின் மூலம் கிடைக்கும் பணத்தில் இருவரும் 50 சதவீத லாபம் என்ற முறையில் ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வைபவ் ஜெயினுடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தொட்டபள்ளாப்புரா அருகே உள்ள ரெசார்ட்டில் வைத்து அகுல் பாலாஜி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக அப்பகுதியில் வசித்து வரும் மஞ்சுநாத் என்பவர் தொட்டபள்ளாப்புரா போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதுகுறித்தும் நேற்று அகுல் பாலாஜியிடம் போலீசார் விசாரித்தனர். மேலும் யுவராஜிடம் விசாரணை நடத்தி போலீசார் சில தகவல்களை பெற்று இருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு 3 பேரும் போலீசார் முன்பு ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் மாலை 4 மணி வரை அதாவது 6 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story