கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2020 1:45 AM GMT (Updated: 20 Sep 2020 1:45 AM GMT)

கரூர் மாவட்டம், குளித்தலை காந்திசிலை அருகே நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை காந்திசிலை அருகே நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் பிரபாகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கவேண்டும். மத்திய அரசு கொரோனா காலத்தை பயன்படுத்தி கொண்டுவந்துள்ள தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் போன்ற சட்டங்களையும் மற்றும் கொள்கையையும் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இருகட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 15 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் தரகம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அரவக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரகுமான், கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம் மலைவீதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 17 பேர் முககவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு நின்று கலந்து கொண்டனர்.

தோகைமலை பஸ் நிலையம் எதிரே கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் கண்டன உரையாற்றினார்.

Next Story