தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு


தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sept 2020 8:04 AM IST (Updated: 20 Sept 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது. இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் தஞ்சை-நாகை சாலையில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கோவில்கள் குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது புளியந்தோப்பு, அருண்மொழிப்பேட்டை கிராமங்களில் சமுத்திரம் ஏரி மற்றும் கரைகளில் வீடுகள், கடைகள், கோவில்கள் என 91 கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

தடை கோரி வழக்கு

அப்போது புளியந்தோப்பு கிராமத்தில் 70 வீடுகள் அகற்றப்பட்டன. அந்த கிராமத்தில் மிக உயரமான சிவலிங்க வடிவில் ராஜகோபுரத்துடன் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவிலையும், அதையொட்டி உள்ள மாடி வீட்டையும் பொதுப்பணித்துறையினர் இடிக்க முயற்சி செய்தனர்.

கோவிலை நிர்வகித்து வந்த ராமமூர்த்தி சுவாமிகளின் மனைவி பத்மாவதி, ஆதிமாரியம்மன்கோவிலை இடிக்க தடைவிதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிலை இடிக்க இடைக்கால தடை விதித்தார். மேலும் பொதுப்பணித்துறையினர் பதில் அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

அதன்படி சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து 14 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் ஆதிமாரியம்மன் கோவில், ராமமூர்த்தி சுவாமிகள் சமாதி, வீடு ஆகியவை கட்டப்பட்டுள்ளன என ஐகோர்ட்டு கிளையில் பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையை ஏற்று 10 வாரங்களுக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த ஆகஸ்டு மாதம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கடந்த 9-ந் தேதி பொதுப்பணித்துறையினர் சென்றனர். அப்போது கோவிலில் உள்ள பொருட்களை எல்லாம் வேறு இடத்திற்கு மாற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கால அவகாசம் வழங்கப்பட்டது.

கோவில் இடிப்பு

இந்த நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆதிமாரியம்மன் கோவிலை இடிக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். 3 பொக்லின் எந்திரங்களின் உதவியுடன் கோவிலின் சுற்றுச்சுவர், அர்த்த மண்டபம் இடிக்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் தங்கியிருந்த வீடும் இடித்து தள்ளப்பட்டது.

கோவில் இடிக்கப்படும் தகவலை அறிந்து இந்து அமைப்பினர் அங்கு திரண்டு வந்தனர். கோவிலின் முகப்பு பகுதியை பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்தபோது இந்து முன்னணி கோட்ட செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம், மாவட்ட செயலாளர் குபேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

நிறுத்தம்

இவர்களிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அன்புசெல்வம், செயற்பொறியாளர் முருகேசன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், தாசில்தார் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நேரத்தில் தொடர்ந்து கோவிலை இடிக்கும் பணி நடந்ததால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணியினர் பொக்லின் எந்திரம் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் கோவிலை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த தகவல் கலெக்டர் கோவிந்தராவ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். அவர், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோவிலை இடிக்க 10 வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருக்கிறோம். அதனால் 5 நாட்கள் அவகாசம் அளித்தால் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுவோம். அதுவரை கோவிலை இடிக்கக்கூடாது என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தற்கொலை மிரட்டல்

ஆனால் கோவிலை இடிப்பதற்கு முன்பு போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் பணியை நிறுத்தினால் கோர்ட்டு அவமதிப்புக்கு பொதுப்பணித்துறையினர் ஆளாக வேண்டிய நிலை உள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி பணியை செய்ய வழிவிட வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி தெரிவித்தார்.

இவ்வாறு இருதரப்பினரும் பேசி கொண்டிருந்தபோது இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், திடீரென கோவில் முகப்பில் ராஜகோபுர வடிவில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஏறினார். இதை பார்த்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் கோவிலை இடிக்கக்கூடாது எனவும், கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மீறி இடித்தால் தற்கொலை செய்வேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்தார்.

பரபரப்பு

உடனே போலீசாரும், அரசு அலுவலர்களும் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். இந்த நிலையில் படியின் வழியாக போலீசார் மேலே வருவதை பார்த்த முருகன், திடீரென சிவலிங்கத்தில் இருந்து தடுப்பு சுவருக்கு சென்று கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். தொடர்ந்து அவர் சத்தம் போட்டதால் அவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்ததால் தடுப்பு சுவர் மீது அமர்ந்து கொண்டார். பின்னர் மற்றொருவர் தண்ணீர் பட்டிலுடன் மேலே சென்று முருகனை கீழே அழைத்து வந்தார்.

தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினாலும், இரவு நேரமாகிவிட்டதால் வெளிச்சமின்மை காரணமாகவும் அலுவலர்களும், போலீசாரும் பணியை நிறுத்திவிட்டு சென்றனர். இதையடுத்து இந்து முன்னணியினரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story