தர்மபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2020 8:33 AM IST (Updated: 20 Sept 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பாப்பாரப்பட்டி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் சக்திவேல், ராஜாமணி, சிலம்பரசன், சண்முகம், குழந்தைவேல், புள்ளாரு, செல்வம், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இண்டூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அப்புனு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், மல்லையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் சிவன், மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நல்லம்பள்ளி, மொரப்பூர்

இதேபோன்று தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைஸாமேரி, நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர்.

நல்லம்பள்ளி, அரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணராஜ், அல்லிமுத்து ஆகியோர் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர்கள் வஞ்சி, தங்கராஜ் ஆகியோர் தலைமையிலும், பாலக்கோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராமன் தலைமையிலும், காரிமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் குமார், குப்புசாமி, மல்லிகா, சிசுபாலன், முத்து, மாது, ராமச்சந்திரன், கோபால் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணமாக மாதந்தோறும் 7,500 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகள் விரோத சட்ட மசோதாக்களை மத்திய அரசு கைவிட வேண்டும். தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 200 நாட்கள் வேலையும், 600 ரூபாய் கூலியும் வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பங்கை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story