நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2020 9:00 AM IST (Updated: 20 Sept 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்,

நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் தம்பி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குழந்தான், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முருகராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும், நுண் நிதிநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி அமைப்புகள் கடன் வசூலை ஒரு ஆண்டு காலத்திற்கு ஒத்தி வைப்பதோடு அதற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

ராசிபுரம்

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாதர் சங்க தலைவர் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பர்ட்டம் நடந்தது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராயப்பன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆதிநாராயணன், கதிர்வேல், முருகேசன், தங்கவேல், கார்த்திக், வேலாயுதம் உள்பட பலர் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனர்.

Next Story