வாகன கடனுக்கு தவணை செலுத்தவில்லை என புகார்: போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து வாலிபர் தற்கொலை முயற்சி


வாகன கடனுக்கு தவணை செலுத்தவில்லை என புகார்: போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து வாலிபர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 21 Sept 2020 7:01 AM IST (Updated: 21 Sept 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் வாகன கடனுக்கு தவணை செலுத்தவில்லை என நிதி நிறுவனம் சார்பில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் மனவேதனை அடைந்த வாலிபர் போலீஸ் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது33). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வாங்கி உள்ளார். இந்த வாகன கடனுக்கான தவணை தொகையை பிரவீன் சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் சார்பில் கோர்ட்டு உத்தரவை பெற்று பிரவீன் மீது பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பிரவீனை அழைத்து விசாரணை நடத்தினர்.

தீக்குளிக்க முயற்சி

கார் அவருடைய தாயார் பெயரில் வாங்கி இருப்பதால் அவரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிரவீன் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்தனர். பெட்ரோல் ஊற்றியதால் உடலில் எரிச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகநூலில் வீடியோ

பிரவீன் தற்கொலைக்கு முயன்றதை வீடியோ எடுத்து அதை முகநூலிலும் வெளியிட்டுள்ளார். போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story