புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது


புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 21 Sep 2020 2:44 AM GMT (Updated: 21 Sep 2020 2:44 AM GMT)

புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த காலத்தில் மீன் மார்க்கெட் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி, நேற்றும் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, திரு.வி.க.நகர் போன்ற இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் எப்போதும் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதிலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வழக்கம்போல் தேன் கூட்டில் தேனீக்கள் மொய்ப்பது போன்று கூட்டம்கூடி தற்போதுள்ள கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். மீன் மார்க்கெட்டுகளுக்கு வந்திருந்த பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்திருந்தாலும், சிலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் சாதாரண நாட்களில் உலாவுவது போல சென்றனர்.

இறைச்சி கடைகளில் குறைவு

புரட்டாசி மாதம் தொடங்கினால் பொதுவாக அசைவ உணவு வகைகளின் விற்பனை, விலை குறைந்து காணப்படும். ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கினாலும் நேற்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் விற்பனையும், விலையும் வழக்கத்தைப் போலவே இருந்தது. பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் சென்றனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்பதற்கு காசிமேடு மீன் மார்க்கெட் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

ஆனால் இறைச்சி கடைகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை தொடர்ந்து அங்கு கூட்டம் வழக்கத்தைவிட சற்று குறைந்திருந்ததை பார்க்க முடிந்தது. விற்பனை குறைந்திருந்தாலும், இறைச்சி வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமலே காணப்பட்டது.

Next Story