போலீசார் எச்சரிக்கை: மெரினா கடற்கரை மணற்பரப்புக்கு சென்றால் அபராதம்


போலீசார் எச்சரிக்கை: மெரினா கடற்கரை மணற்பரப்புக்கு சென்றால் அபராதம்
x
தினத்தந்தி 21 Sept 2020 8:17 AM IST (Updated: 21 Sept 2020 8:17 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரை மணற்பரப்புக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. அந்த வகையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை உள்பட முக்கிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் இந்த மாதம் தொடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையே தொடருகிறது. ஆனாலும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கடற்கரைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2 வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அபராதம்

இதையடுத்து சென்னை மெரினா போலீசார், கடற்கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே விளம்பரப் பலகை வைத்திருக்கின்றனர். அதில் ‘மெரினா கடற்கரை மணற்பரப்புக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என்று பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைத்து இருக்கின்றனர்.

மேலும் கடற்கரை மணற்பரப்புக்கு செல்லும் பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். இருப்பினும் சிலர் போலீசாரின் எச்சரிக்கை, தடுப்பை மீறி மணற்பரப்புக்கு செல்கின்றனர்.

மெரினாவில் அனுமதிக்கவில்லை என்றதும், கார்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த மக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையோர பகுதிகளில் குவியத் தொடங்கினர். அந்த பகுதியில் போலீசார் எந்த தடையும் விதித்ததாக தெரியவில்லை. இதனால் அங்கு கடல் அலையில் நனைந்தபடி விளையாடி மகிழ்ந்தனர்.

அனுமதிக்கவில்லை

அவ்வாறு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் பின்பற்றவில்லை. இதையடுத்து பிற்பகலில் இருந்து பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

Next Story