மழைநீர் சூழ்ந்ததால் வாடிய தக்காளி பயிர்கள் வருண பகவான் கருணை காட்டினாலும் மகிழ்ச்சியடையாத விவசாயிகள்


மழைநீர் சூழ்ந்ததால் வாடிய தக்காளி பயிர்கள் வருண பகவான் கருணை காட்டினாலும் மகிழ்ச்சியடையாத விவசாயிகள்
x
தினத்தந்தி 21 Sep 2020 3:08 AM GMT (Updated: 21 Sep 2020 3:08 AM GMT)

திண்டுக்கல் அருகே, மழைநீர் சூழ்ந்ததால் தக்காளி பயிர்கள் வாடின. இதனால் வருண பகவான் கருணை காட்டினாலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.

திண்டுக்கல்,

சிறுமலை அடிவாரத்தில் சூசையாபுரம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு ஆற்றுப்பாசனம் கிடையாது. தொடக்கத்தில் மழையை நம்பியே இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அவர்கள் சாகுபடி செய்து வந்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதன் காரணமாக இங்கிருந்த நீர்நிலைகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றது. இதையடுத்து சொட்டுநீர் பாசன முறையில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் சாரல் மழை, பலத்த மழை பெய்து வருகிறது.

மழை பெய்தும் மகிழ்ச்சி இல்லை

இதனால் சூசையாபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தோட்டங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் தண்ணீரில் அழுகி நாசமாகின. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறோம்.

சொட்டுநீர் பாசன முறையில் செடிகளுக்கு நேரடியாக தண்ணீர் செல்வதால் பாத்தி அமைக்கவோ, உபரிநீரை வெளியேற்ற கால்வாய் அமைக்கவோ அவசியம் இல்லாமல் போனது. மேலும் சொட்டுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால் தோட்டத்தில் ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதில் மழைநீர் சூழ்ந்து நின்றதால் தக்காளி செடிகள் அழுகியதுடன் அதில் விளைந்த பழங்களும் நாசமாகி போனது. இதனால் பல ஆண்டுகளுக்கு பின்பு வருண பகவான் கருணை காட்டியும் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றனர்.

Next Story