உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Sept 2020 8:58 AM IST (Updated: 21 Sept 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி,

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மலைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தது. அதைத்தொடர்ந்து அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து இருந்து வந்ததால் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதைத்தொடர்ந்து தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சூழலில் அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டார்.

தண்ணீர் திறப்பு

அதைத்தொடர்ந்து நேற்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஜய கார்த்திகேயன் முன்னிலை வைத்தார். இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மொத்தமுள்ள 9 மதகுகளில் 7 மதகுகள் மற்றும் ஷட்டர்கள் வழியாகவும், பிரதான கால்வாயிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

அதன்படி திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 16 அமராவதி வாய்க்கால் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 26 ஆயிரத்து 653 ஏக்கர் நிலங்கள் அமராவதி ஆறு மூலமாக பாசனம் பெறுகின்றன. அதே போன்று புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பிரதான கால்வாய் மூலமாக பாசனம் பெறுகின்றன. ஆக மொத்தம் 51 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து 70 நாட்களுக்கு திறப்பு 65 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் மொத்தம் 135 நாட்களுக்கு நேற்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரையிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அத்துடன் அமராவதி ஆற்றை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் காளிமுத்து எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன், ஆண்டிகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன், கொழுமம் தாமோதரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் மொத்த நீர்ப்பரப்பில் 89.67 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 4,360 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து வினாடிக்கு அமராவதி ஆற்றில் 4000 கனஅடியும் பிரதான கால்வாயில் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story