ரத்ததானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தல்


ரத்ததானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Sep 2020 3:52 AM GMT (Updated: 21 Sep 2020 3:52 AM GMT)

ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சிவகாசி,

சுயமரியாதை இயக்கத்தின் தந்தை சவுந்திரபாண்டியனாரின் பிறந்தநாளையொட்டி சிவகாசி சுப்பிரமணிபுரம் காலனியில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சவுந்திரபாண்டியனார் ரத்ததான கழகம் சார்பில் 4-ம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தபகுதி இளைஞர்கள் ஒன்று திரட்டி ரத்ததான முகாம் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளின்போது ரத்ததானம் முகாம் நடத்தி ரத்தம் கொடுத்துள்ளேன். இங்கு பெறப்படும் ரத்தங்கள் ஏழை மக்களின் உயிரை காப்பற்ற உதவும்.

ரத்ததானம்

ஒவ்வொரு மனிதனும் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது ரத்ததானம். சமுதாய பணியில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்து இதுபோன்ற பல ரத்ததான முகாம்கள் நம் பகுதியில் நடைபெற வேண்டும். அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுசெயலாளர் கரிக்கோல்ராஜ், எஸ்.எஸ்.கதிரவன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா, தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அரசன் கார்த்திக், ராஜபாண்டியன், அ.தி.மு.க. நகர செயலாளர் அசன்பதுருதீன், விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜீ.பி.முருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் டேனியல், சாஸ்தா காளிராஜன், வசந்தகுமார், சுப்பிரமணியபுரம் இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் முத்துக்கருப்பசாமி, செல்வம், செல்வக்குமார், சுந்தர், யோவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை சவுந்திரபாண்டியனார் ரத்ததான கழக நிறுவனர் செல்வகணேஷ் செய்திருந்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். முடிவில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அய்யனார் நன்றி கூறினார்.

பா.ஜ.க.

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பூமாலைராஜா தலைமை தாங்கினார். சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்குமார், ஒலிம்பிக் செல்வம், சீனிவாசன், ரமேஷ், டாக்டர் கதிரவன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி, சபரிகிரீசன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொதுசெயலாளர் பாண்டித்துரை செய்திருந்தார்.

Next Story