திருவண்ணாமலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2020 6:26 AM GMT (Updated: 21 Sep 2020 6:26 AM GMT)

இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை,

இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட துணை செயலாளர் எம்.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்தையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள், வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும், கொள்கைகளையும் கைவிட வேண்டும். கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரித்து, பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும். ரெயில்வே, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Next Story