தட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு


தட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் -  கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 22 Sept 2020 4:00 AM IST (Updated: 21 Sept 2020 10:38 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் திங்கட்கிழமை தோறும் நடந்து வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் வாரம் தோறும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.

நேற்றும் பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் செயலாளர் சுப்பையா பாண்டியன், மண்டல தலைவர் இசக்கிதுரை, இளைஞரணி வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தட்டார்மடத்தில் தண்ணீர் கேன் வியாபாரியும், நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் சொக்கன்குடியிருப்பு பகுதி செயலாளருமான செல்வன் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். செல்வனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். செல்வனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்‘ என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டு மூடப்படாமல் கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஏற்கனவே இருந்த கழிப்பறை தற்போது செயல்படாமல் உள் ளது. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மழை காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், மாவட்ட செயலாளர் தங்கராஜ் பாண்டியன், தமிழர் விடுதலைக் கொற்றம் தலைவர் வியனரசு மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபம் மறுசீரமைப்புக்காக ரூ.75 லட்சம் செலவிட ஒப்புதல் அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் அந்த மணி மண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனாரின் மார்பளவு சிலை அமைந்துள்ளது. அது அவருடைய வரலாற்று வீர தீர செயல்களுக்கு பொருத்தமற்ற நிலையில் உள்ளது. ஆகையால் அவர் குதிரையில் இருப்பது போன்று சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கனார் விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும்‘ என்று கூறி உள்ளனர்.

சிவபாரத இந்து மக்கள் இயக்க தலைவர் பாலசுப்பிரமணியன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தமிழகத்தில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைப்படி தமிழ், ஆங்கிலம், இந்தி கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இந்த பள்ளிகள் மூலம் ஏழை எளிய மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள். தமிழக அரசு நவோதயா பள்ளிகளை திறக்க முன்வராவிட்டால், பள்ளியின் சிறப்பு குறித்து விளக்கியும், பள்ளிகளை திறக்க வலியுறுத்தியும் சிவபாரத இந்து மக்கள் இயக்கம் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story