அரசு பள்ளிக்கூட அலுவலக உதவியாளர் பணிக்கு போலி பணிநியமன ஆணை வழங்கிய வாலிபர் கைது


அரசு பள்ளிக்கூட அலுவலக உதவியாளர் பணிக்கு போலி பணிநியமன ஆணை வழங்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2020 4:15 AM IST (Updated: 22 Sept 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி பணிநியமன ஆணை வழங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் ரெயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையிடம் சம்பவத்தன்று ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தன்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி நியமித்துள்ளதாக கூறி, பணி நியமன ஆணையை வழங்கினார். அந்த பணி ஆணையில் அரசு துறைகளில் வழங்குவதை போலவே ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய விவரம், முகவரி, முதன்மை கல்வி அதிகாரி கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து, சீல் போன்றவை இருந்தது.

ஆனால், முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்து மட்டும் மாற்றம் இருந்தது. இதனால் தலைமை ஆசிரியை உடனடியாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பணி ஆணை குறித்து விவரம் கூறினார். ஆனால், அதிகாரிகள் அதுபோன்ற பணி ஆணை இந்த ஆண்டில் யாருக்கும் வழங்கப்படவில்லை என கூறியதால், தலைமை ஆசிரியை அதிர்ச்சி அடைந்து, அந்த வாலிபரை முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அந்த பணி நியமன ஆணையை வாங்கி ஆய்வு செய்தபோது, அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மர்மநபர் ஒருவர், ரெயில்வே காலனி அரசு பள்ளிக்கூடத்தில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூ.7 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதை நம்பிய அந்த வாலிபர், மர்ம நபரிடம் முதல் கட்டமாக ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் அந்த மர்மநபர், அவராகவே பணி நியமன ஆணை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்திட்டு வாலிபரிடம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், போலி பணிநியமன ஆணையை அச்சிட்டு வாலிபரிடம் வழங்கியது, அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 35) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்று வேறு யாருக்காவது போலி பணிநியமன ஆணை அச்சிட்டு வழங்கி உள்ளாரா? என்பது குறித்து சிவக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story