10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பரீட்சை தொடங்கியது இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு


10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பரீட்சை தொடங்கியது இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு
x
தினத்தந்தி 22 Sep 2020 2:05 AM GMT (Updated: 22 Sep 2020 2:05 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் 10, 12 வகுப்பு தனித்தேர்வுகளுக்கு 22 மையங்களில் நேற்று பரீட்சை தொடங்கியது. இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினர்.

திருச்சி,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டதால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாற்றுத் திறனாளி மாணவர்கள், தனித்தேர்வுகள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நேற்று முதல் பரீட்சை தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல 8, 11-ம் வகுப்புக்கு வருகிற 29-ந் தேதி முதல் தொடங்கி, அக்டோபர் மாதம் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 10-ம் வகுப்பிற்கு 13 தேர்வு மையங்களிலும், 12-ம் வகுப்பிற்கு 9 தேர்வு மையங்கள் என மொத்தம் 22 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு முறையே 1,049 பேரும், 260 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10-ம் வகுப்பு தேர்வுக்கு 170 பேர் வராத நிலையில் 877 பேர் தேர்வு எழுதினர். 12-ம் வகுப்பு தேர்வில் 35 பேர் வராதநிலையில் 225 பேர் தேர்வு எழுதினர். இந்த இரு தேர்வுகளிலும் 160 சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட 1,104 பேர் தேர்வு எழுதினர். 205 பேர் தேர்வு எழுத வரவில்லை. இவர்கள் தேர்வில் சொல்வதை எழுதுவதற்கு, அரசு நியமித்த உதவியாளர்கள், சிறப்பு குழந்தைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்லைன் மூலம்...

ஆசிரியர் கல்வியியல் தேர்வு திருச்சியில் நேற்று 3 மையங்களில் நடைபெற்றது. 150 பேர் தேர்வு எழுது விண்ணப்பித்திருந்தனர். இதில் 117 பேர் தேர்வு எழுதினர். 33 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுபோல திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது.

இளநிலை மற்றும் முதுநிலை மாணவ-மாணவிகள் எழுத்து தேர்வுகளை இணையதளம் வழியாக வீட்டிலிருந்தபடியே எழுதினர். இத்தேர்வானது வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story