குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு பாலமோரில் 46.6 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு பாலமோரில் 46.6 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 22 Sept 2020 8:07 AM IST (Updated: 22 Sept 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக பாலமோரில் 46.6 மி.மீ. மழை பதிவானது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பரவலாக நீடித்து வருகிறது. கடலோர கிராமங்கள், மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது.

நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோட்டார் ரெயில்வே குடியிருப்பு உள்பட பல பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர். கழிவுநீர் ஓடையில் மழைநீரும் சேர்ந்து சாலைகளில் பாய்ந்து செல்வதை காணமுடிந்தது. நேற்று காலை 9 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு

இதே போல் மார்த்தாண்டம் உள்பட மற்ற பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இருப்பினும் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. அதேபோல் ரப்பர் பால் வெட்டும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாலமோரில் 46.6 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 46.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி- 15.8, சிற்றார் 1- 28, களியல்- 8.4, கன்னிமார்- 16.8, கொட்டாரம்- 37.6, குழித்துறை- 5.4, மயிலாடி- 8.2, நாகர்கோவில்- 8.6, பேச்சிப்பாறை- 26.4, புத்தன்அணை- 6.4, பெருஞ்சாணி- 6.8, சிற்றார் 2- 40, சுருளோடு- 8.2, தக்கலை- 9.4, குளச்சல்- 12.8, இரணியல்- 22, மாம்பழத்துறையாறு- 6, அடையாமடை- 15, குருந்தன்கோடு- 7.6, முள்ளங்கினாவிளை- 6, முக்கடல் அணை- 7.4 என மழை பதிவாகி இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 599 கன அடி தண்ணீர் வந்தது. அது நேற்று 1,271 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதே போல் 521 கன அடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 994 கனஅடி தண்ணீர் வருகிறது. இதே போல் சிற்றாறு 1 அணைக்கு 118 கன அடியும் தண்ணீர் வந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 31.75 அடியாகவும், பெருஞ்சாணி அணை 67.30 அடியாகவும், முக்கடல் அணை 17.1 அடியாகவும், சிற்றார் -1 10.79 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 530 கனஅடி நீரும், சிற்றார்-1 அணையில் இருந்து 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

Next Story