நாமக்கல் மாவட்டத்தில் 115 நகரும் ரேஷன் கடைகள் சேவை இன்று தொடக்கம் அமைச்சர் தங்கமணி பேட்டி


நாமக்கல் மாவட்டத்தில் 115 நகரும் ரேஷன் கடைகள் சேவை இன்று தொடக்கம் அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2020 2:54 AM GMT (Updated: 22 Sep 2020 2:54 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 115 நகரும் ரேஷன் கடைகள் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். மேலும் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை, முககவசங்கள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் சுகாதார நடவடிக்கை பணிகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

போதிய படுக்கை வசதி

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, இணை இயக்குனர் (மருத்துவம்) சித்ரா, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பி.ஆர்.சுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை மட்டும் தடை செய்ய கூறி உள்ளோம். நோய் தொற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நகரும் ரேஷன் கடைகள்

ஆண்டு தோறும் தட்கலில் 10 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல்-அமைச்சரின் உத்தரவை அடுத்து 25 ஆயிரம் இணைப்புகள் கொடுக்கப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) முதல் அந்த பணி தொடங்கி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 75 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) 115 நகரும் ரேஷன் கடைகள் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 13 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story