கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது சேலம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கைதி பர்லியார் சோதனைச்சாவடியில் சிக்கினார்


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது சேலம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கைதி பர்லியார் சோதனைச்சாவடியில் சிக்கினார்
x
தினத்தந்தி 23 Sept 2020 3:30 AM IST (Updated: 23 Sept 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தபோது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கைதி பர்லியாறு சோதனைச்சாவடியில் சிக்கினார்.

ஊட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே ஆராங்கல்திட்டை சேர்ந்தவர் அய்யண்ணன். அவரது மனைவி லட்சுமி (வயது 60) . இவர் கடந்த 17-ந் தேதி கல்லாங்குத்து கரட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் ஓமலூர் அருகே கட்டிநாயக்கன் பட்டியை சேர்ந்த நரேஷ்குமார் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை சிறையில் அடைப்பதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் உறுதியானது.

இதனைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்து அவர் தப்பிவிட்டார். அவரை மல்லூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நரேஷ்குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொரோனா பாதித்த நரேஷ்குமார் சேலத்தில் இருந்து நீலகிரிக்கு தப்பி வருவதாக குன்னூர் வெலிங்டன் போலீசாருக்கு மல்லூர் போலீசார் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் சோதனைச்சாவடியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

அப்போது கல்லாரில் இருந்து பர்லியாரை நோக்கி இரு சக்கர வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தில் ஒரு நபர் முழு பாதுகாப்பு கவச உடையுடன் வந்தார். அவரை வெலிங்டன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ்குமார் என்பதும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெலிங்டன் போலீசார் நரேஷ்குமாரை சேலம் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கொரோனா பாதித்து இருந்ததால் பாதுகாப்பாக வாகனத்தில் நரேஷ்குமார் சேலம் கொண்டு செல்லப்பட்டார். பர்லியார் சோதனைச்சாவடியில் போலீசார் சுற்றி வளைத்து கைதியை பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியது.

Next Story