குழந்தை இறந்ததால் மனஉளைச்சல்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


குழந்தை இறந்ததால் மனஉளைச்சல்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 23 Sept 2020 4:15 AM IST (Updated: 23 Sept 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இறந்ததால் மனஉளைச்சலால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர், 

வேலூரை அடுத்த பொய்கைமோட்டூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி உமாமகேஸ்வரி (24). இவர்களுக்கு 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கீர்த்தனா (2) உள்பட 2 பெண் குழந்தைகள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாடி கொண்டிருந்த கீர்த்தனா வீட்டு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாள். இதனால் உமாமகேஸ்வரி மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானார். குழந்தை இறந்ததால் மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story