போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது


போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2020 2:24 AM GMT (Updated: 23 Sep 2020 2:24 AM GMT)

செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து போலீஸ் போல் நடித்து மிரட்டி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டேங்கர் லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மணலி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தநிலையில், அந்த பெண்ணுடன் கடந்த 19-ந்தேதி இரவு புழல் அடுத்த வெஜிடேரியன் நகரில் உள்ள ஒரு மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் போலீஸ் என்று கூறி அவர்களை மிரட்டி உள்ளார். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் கள்ளக்காதலர்கள் என்பது எனக்கு தெரியும். எனவே போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள்’ என கூறியுள்ளார்.

மேலும் அவர் அந்த பெண்ணிடம், தன்னுடன் உல்லாசமாக இருந்தால் ‘உன் கணவரிடம் கள்ளக்காதல் குறித்து கூற மாட்டேன்’ என வற்புறுத்தி கள்ளக்காதலன் முன்னாடியே அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்று விட்டார். இந்த நிலையில் அந்த பெண் நடந்து வந்த போது மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி தன்னிடமிருந்த பணம் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதாக மணலி போலீசில் புகார் செய்தார்.

டிப்-டாப் ஆசாமி

புகாரை பெற்று கொண்ட போலீசார், பெண் கொடுத்த புகாரின் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் என கூறி தன்னை ஒருவர் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் அந்த பெண்ணிடம் பறிக்கப்பட்ட செல்போன் சிக்னலை வைத்து மாதவரம் பால்பண்ணை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நேற்று முன்தினம் மாலை போலீஸ் உடை அணிந்து டிப்-டாப்பாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சென்னை தண்டையார்பேட்டை ராஜசேகரன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 37) என்பதும், அவர் 5-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.

கைது

அதில் அந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், தான் போலீஸ் போல் தோற்றம் கொண்டு இருந்ததால், அதனை பயன்படுத்தி நடித்து செங்குன்றம், மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இரவு நேரங்களில் நோட்டமிட்டு தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதலர்களை குறிவைத்து போலீஸ் எனக்கூறி மிரட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிவித்தார்.

மேலும், அப்போது அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் செல்போன்களை மிரட்டி பறித்து வந்ததாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இச்செயலில் ஈடுபட்டு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் உல்லாசமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு இது தொடர்பான வழக்கில் செங்குன்றம் போலீசார் ஏற்கனவே தன்னை கைது செய்து ஜெயிலில் அடைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு பிச்சைமணியை கைது செய்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை போலீஸ் கமிஷனர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Next Story