28-ந்தேதி மீண்டும் திறக்கப்படுவதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சீரமைப்பு பணி வியாபாரிகள் மும்முரம்


28-ந்தேதி மீண்டும் திறக்கப்படுவதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சீரமைப்பு பணி வியாபாரிகள் மும்முரம்
x
தினத்தந்தி 23 Sep 2020 2:36 AM GMT (Updated: 23 Sep 2020 2:36 AM GMT)

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வருகிற 28-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பராமரிப்பு- சீரமைப்பு பணியில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இதையடுத்து இங்கு செயல்பட்ட காய்கறி சந்தை திருமழிசை துணைக்கோள் நகரத்திலும், பழச்சந்தை மாதவரம் பஸ் நிலைய வளாகத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படாத இந்த சந்தைகளில் கடைகள் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கக்கோரி வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கோயம்பேடு சந்தையை திறக்கும் முடிவுக்கு அரசு வந்தது. முதற்கட்டமாக கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடி கடந்த 18-ந்தேதி திறக்கப்பட்டது. அதேவேளை காய்கறி மார்க்கெட் 28-ந்தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

28-ந்தேதி திறப்பு

அரசு அறிவித்தபடி, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வருகிற 28-ந்தேதி முதல் திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மார்க்கெட் வளாகத்தில் உள்ள தங்களது கடைகளை சீரமைக்கும் பணிகளில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதை பார்க்க முடிந்தது. மார்க்கெட் வளாகத்தில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சாலைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைமேடைகளில் பெயிண்ட் அடிக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேபோல பழைய கட்டிடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு கூரை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் புதுப்பொலிவுடன் மாற தொடங்கி இருக்கிறது.

Next Story