ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 வார்டுகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்துடன் இணைக்கக்கோரி போராட்டம்


ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 வார்டுகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்துடன் இணைக்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2020 9:49 AM IST (Updated: 23 Sept 2020 9:49 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 வார்டுகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்துடன் இணைக்கக்கோரி போராட்டம் வி.பி.ஜெயக்குமார் பேட்டி.

ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 18 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகள் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த 10 வார்டுகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், முதியவர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காயல்பட்டினம் தென்பாகம் கிராம அலுவலகம் அமைந்துள்ள காயல்பட்டினத்துக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த 10 வார்டுகளையும் ஆறுமுகநேரி வருவாய் கிராமத்தோடு இணைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக பல்வேறு பொது அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறுமுகநேரியில் உள்ள காயல்பட்டினம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களின் பெயர்களை ஆறுமுகநேரி என்று இருப்பதை அழித்துவிட்டு காயல்பட்டினம் என எழுதும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த போராட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். இதன் தொடக்கமாக, ஆறுமுகநேரி போலீஸ் நிலைய பெயர் பலகையை காயல்பட்டினம் என மாற்றும் போராட்டத்தை வருகிற 29-ந்தேதி நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர இந்து முன்னணி சார்பில், கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் மறைந்த சசிகுமாரின் 4-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஆறுமுகநேரி நகர தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சசிகுமாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கசமுத்து, ஆறுமுகநேரி நகர இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story